08th January 2026 13:59:57 Hours
இந்திய இராணுவ மனைவியர் நலச் சங்கத்தின் தலைவியும், இந்திய இராணுவ பிரதானியின் துணைவியருமான திருமதி சுனிதா திவேதி அவர்கள், இந்தியாவின் இலங்கை இராஜதந்திர பிரதிநிதிகளின் துணைவியார்களுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களை, இலங்கை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 2026 ஜனவரி 07 ஆம் திகதி சந்தித்தார்.
இச்சந்திப்பை தொடர்ந்து பிரதிநிதிகள் குழு, மாற்றுத் திறனாளி போர் வீரர்கள் சிகிச்சை பெற்று வரும் அத்திடிய மிஹிந்து செத் மெதுர நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
அங்கு வருகை தந்த தூதுக்குழுவை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவி திருமதி லிலாந்தி தொலகே அவர்கள் அன்புடன் வரவேற்றார். இலங்கை இராணுவ கலாசார நடனக் குழு பார்வையாளர்களை நல விடுதிக்கு சம்பிரதாய முறையில் அழைத்துச் சென்றது.
இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவ மனைவியர் நலச் சங்கத்தின் தலைவி மற்றும் குழுவினர், அங்கு வசிக்கும் போர் வீரர்களின் நலனை விசாரித்து, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினர். குழுவினர் போர்வீரர்களுடன் அன்பான உரையாடல்களிலும் ஈடுபட்டனர், அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் மன உறுதிக்கு பங்களித்தனர். அதன் பின்னர் திருமதி சுனிதா திவேதி அவர்கள் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முன்னாள் படைவீரர் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜீ.எல்.கே.வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், போர்வீரர்கள் மற்றும் அவர்களது துணைவியர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.