27th August 2025 10:06:37 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 41 வது வருடாந்த பொதுக் கூட்டம் 2025 ஆகஸ்ட் 22 அம் திகதி இராணுவத் தலைமையக பல்லூடக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றிய பின்னர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடல் பாடப்பட்டதுடன், உயிர்நீத்த போர் வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவு பற்றி தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், நிகழ்ச்சி நிரலின்படி கூட்டம் ஆரம்பமாகியது.
வருடாந்த பொதுக் கூட்டத்தைத் ஆரம்பித்து வைத்து, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். அதன் பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி தர்ஷனி யஹாமபத் கடந்த வருடாந்த பொது கூட்டத்தின் அறிக்கையை சமர்ப்பித்தார், மேலும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை பொருளாளர் மேஜர் ஏ.எஸ்.என். ஹத்துருசிங்க சமர்ப்பித்தார்.
அதன் பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிர்வாகச் செயலாளர் மேஜர் சி.டி. ஜோசப் அவர்கள் வழங்கினார்.
பின்னர், படையணி சேவை வனிதையர் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட நலன்புரித் திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நலன்புரித் திட்டங்கள் குறித்து ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
பின்னர், வருடாந்த பொதுக் கூட்டத்தின் இறுதியில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் நன்றியுரை நிகழ்த்தினார். பின்னர், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், IICA நிறுவனத்தால் நடாத்தப்பட்ட ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்கள் பாடநெறியை முடித்த 15 துணைவியர்களில், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 10 துணைவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோரின் எண்ணக்கருவின்படி, வீடு கட்டுவதற்கு பொருளாதார ரீதியாக வசதியற்ற இராணுவ வீரர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்காக ஒரு லட்சத்து ஐநூறாயிரம் ரூபாய் (ரூ. 1,500,000.00) நிதியுதவி வழங்கப்பட்டது. அதன்படி, இரண்டு சிப்பாய்களும் ஒரு சிவில் உறுப்பினரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.
அதன் பின்னர், மீதமுள்ள பணிகளை முடிக்க இராணுவ வீரர்களுக்கு தலா நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (ரூ. 450,000.00) பெறுமதியான மூன்று நன்கொடைகள் வழங்கப்பட்டன. மேலும் இராணுவ சிவில் ஊழியர்கள் தங்கள் பகுதியளவு நிர்மானிக்கப்பட்ட வீடுகளை கட்டிமுடிக்க தலா மூன்று லட்சம் ரூபாய் (ரூ. 300,000.00) வழங்கப்பட்டது.
மேலும், இரண்டு சேவையிலுள்ள பணியாளர்களின் மனைவி மற்றும் மகளின் மருத்துவ சிகிச்சைக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் (ரூ. 100,000.00) பெறுமதியான இரண்டு மருத்துவ மானியங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும், இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கோப்ரல் பி.ஆர். நுவன் பிரதீப் அவர்களின் இரட்டைக் குழந்தைகளுக்கு பால் மா வாங்குவதற்காக ஒரு வருட காலத்திற்கு மாதாந்தம் எட்டாயிரம் ரூபாய் (ரூ. 8,000.00) மருத்துவ மானியம் வழங்கப்பட்டது.
மேலும், இலங்கை இராணுவத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர் திரு. எச்.என்.எம்.வி.எல். மதுசங்க அவர்களுக்கு பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளின் இரண்டாம் கட்ட நிதி நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய் (ரூ. 100,000.00) வழங்கப்பட்டது.
இராணுவ நடனக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட நடனங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த விழா, தேசிய கீதம் பாடப்பட்டதுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர், அனைத்து படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியர்கள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தேநீர் விருந்துபசாரத்தில் பலந்து கொண்டு, குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன் ஒரு சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.