Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th March 2025 12:36:17 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் சிறந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் 2025 மார்ச் 03 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் கலந்து கொண்டார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளிலும் சிறந்து விளங்கிய 232 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் வருகை தந்திருந்த விருந்தினர்களால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. இராணுவ நடனக் குழுவினரால் வழங்கப்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகளால் இந்த நிகழ்வு மேலும் மெருகூட்டப்பட்டது.

இந்த முயற்சிக்காக மொத்தம் ரூ. 10,260,000.00 செலவிடப்பட்டது, அதில் இராணுவத் தளபதியின் நல நிதியத்தால் ரூ.7,060,000.00 வழங்கப்பட்டது. அதே நேரத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ரூ.3,200,000.00 பங்களிப்புடன் 232 பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், தேசிய சேமிப்பு வங்கியில் புதிய சேமிப்புக் கணக்குகள் திறக்கப்பட்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய 34 மாணவர்களுக்கு தலா ரூ.15,000.00 உதவித்தொகையும், 2023 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஒன்பது 'ஏ' சித்திகளைப் பெற்ற 134 மாணவர்களுக்கு தலா ரூ.25,000.00 உதவித்தொகையும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்து விளங்கிய 64 மாணவர்களுக்கு தலா ரூ.100,000.00 உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

மேலும், தேசிய சேமிப்பு வங்கி ஒவ்வொரு உதவித்தொகை பெறுநருக்கும் ஒரு தொகுதி பயிற்சி புத்தகங்கள் மற்றும் ஒரு பாடசாலை பையை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர் தேசிய சேமிப்பு வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசில்களை வழங்கினர்.

புலமைப்பரிசில் வழங்கும் விழாவிற்குப் பின்னர், நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோருடன் விருந்துபசாரத்தின் போது உரையாடும் வாய்ப்பு கிடைத்ததுடன், அதே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்தை அனுபவித்தனர். தேநீர் விருந்துபசாரத்தின் பின்னர், புலமைப்பரிசில் பெற்றவர்கள் இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும், புலமைப்பரிசில் பெற்றவர்களில் ஒருவர் நன்றியுரை நிகழ்த்தினார். பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.