19th January 2025 10:51:53 Hours
காலி 'விரு கெகுலு' சிறார்களின் வருடாந்த கலை விழா நிகழ்ச்சி 2025 ஜனவரி 17 ஆம் திகதி காலியில் உள்ள ஹால் டி காலி அரங்கில் நடைபெற்றது. இந்த வருடாந்த கலை விழா இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ.டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி மற்றும் திருமதி அஜந்தா டி சில்வா ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், பாலர் பாடசாலையின் பொறுப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர் திருமதி அஜந்தா டி சில்வா கலந்து கொண்டார். அவர் வருகை தந்ததும், தாம்பூலம் வழங்கி பிள்ளைகள் குழு அவரை அன்புடன் வரவேற்றது. பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன் பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து, பாலர் பாடசாலை பிள்ளைகள் குழுவினரால் வண்ணமயமான வரவேற்பு நடனம் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அற்புதமான நடன அம்சங்கள், சிங்கள மற்றும் ஆங்கில நாடகங்கள் மற்றும் பாலர் பாடசாலை பிள்ளைகளின் துடிப்பான அழகியல் திறமைகளை எடுத்துக்காட்டும் பாடல் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 61 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், சில சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் பாலர் பாடசாலை பிள்ளைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.