09th March 2024 21:13:29 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 2024 மார்ச் 08 ஆம் திகதி இராணுவ பொறியியல் சேவைகள் படையணி உணவகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மங்கல விளக்கு ஏற்றி விழா ஆரம்பிக்கப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, கலாநிதி பாக்யா அபேசிங்க அவர்கள் இலங்கை இராணுவ பெண்களின் திறமைகளை வெளிப்படுதும் வகையில் மனதைக் கவரும் பாடல் நிகழ்ச்சியை நடாத்தினார்.
மேலும், தேவையுடைய இராணுவ பெண் சிப்பாய்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகள் தலைவியினால் வழங்கப்பட்டதுடன், மேலும் கர்ப்பிணிப் வீராங்கனைகளுக்கு பெறுமதியான 10 வவுசர்களும் வழங்கப்பட்டன.
கடமைக்கு அப்பால் பெண் சிப்பாய்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, வீட்டு வசதி மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ மகளிர் படையணியில் கடமையாற்றும் பெண் சிப்பாய் அவரது புதிய வீட்டை நிர்மாணித்து முடிப்பதற்கு ரூ. 600,000/-, மற்றொருவருக்கு அவரது வீட்டின் கட்டுமானத்தை முடிக்க ரூ. 450,000/- மற்றும் தலசீமியா நோயுடன் போராடும் தனது குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக இராணுவ வீராங்கனைக்கு ரூ. 100,000/- மும் நன்கொடையாக வழங்கப்பட்டது.