11th February 2024 15:26:35 Hours
மாத்தளை விஜய கல்லூரி மாணவர்களின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் 2024 பெப்ரவரி 10 ஆம் திகதி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி மாத்தளை விஜய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக விஜய கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருகை தந்த இராணுவத் தளபதியை விஜய கல்லூரி மாணவர்கள் வரவேற்றனர். வீரமரணமடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் மங்கல விளக்கு ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
நிகழ்ச்சியின் போது, இராணுவத் தளபதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி ஆகியோர் இணைந்து 100 கற்றல் உபகரணப் பொதிகளை வழங்கினர். மேலும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியில் பாடசாலையில் கற்கும் 12 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி பாடசாலையின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நன்கொடை நிகழ்ச்சி முடிவில், பாடசாலையின் அதிபர் பாடசாலையின் கல்வி மற்றும் எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகிய இருவருக்கும் சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார். பின்னர், தளபதி பங்கேற்பாளர்களுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டார்.
தொர்ந்து, பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் அனுசரனையாளர் குழுவின் நிதியுதவியில் 17 வது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் புனரமைக்கப்பட்ட நான்கு வகுப்பறைகளை இராணுவத் தளபதி திறந்து வைத்தார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் அன்றைய நிகழ்ச்சி முடிவில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.