01st March 2023 23:38:20 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு தனது நலன்புரிப் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில், இன்று (மார்ச் 1) காலை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கை வங்கியுடன் இணைந்து உயிர்நீத்த போர்வீரர்கள், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், இராணுவத்தில் சேவையாற்றும் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 140 புலமைப்பரிசில்களை வழங்கியது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பரிசு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் மேல் மாகாண இலங்கை வங்கியின் உதவி பொது முகாமையாளர் திருமதி ருசிந்திர பெரேரா, வட கொழும்பு இலங்கை வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி மிதிலா தில்ஹானி, லேக் ஹவுஸ் இலங்கை வங்கி கிளை முகாமையாளர் திரு உதித பெரேரா, இலங்கை வங்கியின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றல் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பாடலுடன் அன்றைய நிகழ்ச்சி நிரலைத் தொடங்கின, அதைத் தொடர்ந்து உயிர் நீத்த போர் வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தொடர்ச்சியான நலன்புரிப் பணிகளை பற்றி பேசும் வீடியோ காட்சி திரையிடப்பட்டது. முதலில், 2021 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசு பரீட்சையில் சித்தியடைந்த 30 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வங்கி வைப்புத் தொகையாக வழங்கியதோடு, ரூபா. 7,000/= பெருமதியான பாடசாலை உபகரணங்களின் பொதியையும் வழங்கினர். அத்தோடு அந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக இலங்கை வங்கியிடமிருந்து ரூபா 2000/= வங்கி வைப்புத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு பொது சாதாரண தர பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 71 மாணவர்களுக்கு வங்கி வைப்புத் தொகையாக ரூ.20,000 மற்றும் 7,500 ரூபா பெறுமதியான பாடசாலைப் பொருட்களும் வழங்கப்பட்டதுடன், இலங்கை வங்கியிடமிருந்து வங்கி வைப்புத் தொகையாக 2000 ரூபாவும் வழங்கப்பட்டன. மேலும், 2021 இல் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற 39 மாணவர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவிருந்து ரூ.25,000 வங்கி வைப்புத்தொகை மற்றும் 3,000 ரூபா பாடசாலை உபகரண பொதிகள் மற்றும் இலங்கை வங்கியிடமிருந்து வங்கி வைப்புத் தொகையாக 2,000 ரூபாவும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவின் இறுதியில், இராணுவத் தளபதி இலங்கை வங்கியின் உதவிப் பொது முகாமையாளருக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இலங்கை வங்கி லேக் ஹவுஸ் கிளையின் முகாமையாளருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார். இந்நிகழ்வில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஆற்றிய சுருக்கமான உரையில் பயனாளிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்கள் நன்றாகப் படித்து எதிர்காலத்தில் நாட்டின் தேசப்பற்றுள்ள குடிமக்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். விழா முடிவடையும் நேரத்தில், ஒரு பயனாளி நன்றியுரையை நிகழ்த்தி, ஊக்கத்தொகையை வழங்கிய இராணுவ சேவை வனிதையர் பிரிவிக்கு நன்றி தெரிவித்தார். அன்றைய பிரதம அதிதி குறித்த பயனாளிகள் மற்றும் அழைக்கப்பட்டவர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் ஓரிரு எண்ணங்களையும் இன்பங்களையும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அனைத்து விருந்தினர்களும் பயனாளிகளுடன் குழுபடம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர். இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சீ டி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய பரிசளிப்பு விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.